Archive

Archive for the ‘புதுச்சேரி’ Category

புதுச்சேரியில் விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டம்

விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டம்

விக்கிப்பீடியா

இடம்: வணிக அவை சிறிய அரங்கம், நாள்: 20-02-2011

காலம்: காலை 10.00 மணிமுதல் பகல் 1.00 மணிவரை

தலைமை: இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்,

(புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்)

நிகழ்ச்சி நிரல்: 10:00 – தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்

11:00 – விளக்கப் பயிற்சிகள்

12:00 – கலந்துரையாடல்

விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்து விளக்கம்:

அ.ரவிசங்கர், நிர்வாகி (விக்கிப்பீடியா-தமிழ்)

விக்கிப்பீடியா (http://ta.wikipedia.org) என்பது தளையற்ற உள்ளடக் கங்களைக் கொண்ட ஒரு இலவச கலைக்களஞ்சியமாகும் (encyclopedia). பலரின் கூட்டு முயற்சியால் பல மொழிகளில் கட்டமைக்கப்படும் கலைக்களஞ்சியமாகும். இது இலாபத்தை எதிர்நோக்காத விக்கிமீடியா அறக்கட்டளையின்  திட்ட ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

விக்கிப்பீடியா தமிழ் மொழி உள்பட மொத்தம் 279 மொழிகளில் உள்ளது. இதில் தமிழ் மொழியில் இதுவரை 28,023 கட்டுரைகள் உள்ளன. கட்டுரைகள் எண்ணிக்கை வரிசைபடி உலக மொழிகளில் தமிழ் மொழி 68-வது இடத்தில் உள்ளது. இந்திய மொழிகளில் இந்தி (67,589),  தெலுங்கு(47,386),  மராத்தி(32,598) மொழிகளுக்கு அடுத்த நிலையில் தமிழ் (28,036) கட்டுரைகள் இடம் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

இந்த விக்கிப்பீடியாவை நீங்களும் தொகுக்கலாம். தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள் உள்ளிட்ட முக்கிய தலைப்புகளில் இதில் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ் விக்கிபீடியா திட்டங்களை அறிமுகம் செய்து விளக்கப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதில் கலந்து கொண்டு பயன்பெறவும், தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்பை செலுத்தவும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

கைப்பேசி: 94431 05825, மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com,

வலைப்பூ:  http://puduvaibloggers.blogspot.com,

இணையதளம்: www.pudhuvaitamilbloggers.org

புதுச்சேரியில் தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு: நிகழ்ச்சி நிரல்

தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு


எதிர்ப்பு மாநாடு


நாள் : 30.01.2011 ஞாயிற்றுக் கிழமை
நேரம் : காலை 9.00 முதல் 1.00 மணி வரை
இடம் : வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்), புதுச்சேரி.

தலைமை
திரு. இரா. சுகுமாரன் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
முன்னிலை
திரு. கோ.அ.செகநாதன் அவர்கள்,
தலைவர் உள்ளாட்சி மன்றங்களின் கூட்டமைப்பு
திரு. ஓவியர் இரா. இராசராசன் அவர்கள்
திரு. ஏ. வெங்கடேசு அவர்கள்,
திரட்டி,- தமிழ் வலைப்பதிவு திரட்டி
வரவேற்பு
திரு. க.அருணபாரதி அவர்கள்,
மென்பொருள் வல்லுநர்,

கைப்பேசியில் மின் நூல்வெளியிட்டு
மாநாட்டுத் தொடக்க உரை
பேராசிரியர் திரு. ந.தெய்வ சுந்தரம் அவர்கள்
தலைவர் (ஓய்வு), தமிழ்மொழித்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
மின் நூல் முதல் படி பெறுபவர்
திரு. கோ. சுகுமாரன்
செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு,
பொதுக்குழு உறுப்பினர், உத்தமம், (INFITT)

கருத்துரை

பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா அவர்கள்

புதுச்சேரி இயற்கைக் கழகம்

திரு. இராம.கி. அவர்கள் பொறியாளர்

பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் , (INFITT) சென்னை

பேராசிரியர் திரு. நா. இளங்கோ அவர்கள்,

தமிழ் துறை, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி

திரு. மா. பூங்குன்றன் அவர்கள்,

தென்மொழி , சென்னை

திரு. கோ. திருநாவுக்கரசு அவர்கள்,

தாளாண்மை உழவர் இயக்கம்

திரு. இரா. அழகிரி அவர்கள்,

தமிழர் தேசிய இயக்கம், புதுச்சேரி

திரு. ந.மு.தமிழ்மணி, அவர்கள்,

அமைப்பாளர், செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி

திரு. க. தமிழ் மல்லன் அவர்கள்,

தலைவர், தனித்தமிழ் இயக்கம், புதுச்சேரி

திரு. தமிழ நம்பி அவர்கள்,

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு

திரு. சீனு. அரிமாப்பாண்டியன் அவர்கள்,

செயலர், தனித்தமிழ் கழகம், புதுச்சேரி

திரு. பெ. பராங்குசம் அவர்கள்,

தலைவர், இலக்கியப் பொழில் இலக்கியப் பாசறை, புதுச்சேரி.

திரு. தமிழ்நெஞ்சன் அவர்கள்,

புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம் புதுச்சேரி

திரு.ப. திருநாவுக்கரசு அவர்கள்,

தலைவர், நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி

மாநாட்டு நிறைவுரை

திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்

தமிழ் எழுத்துப் பாதுகப்பியக்கம்

நன்றியுரை:

திரு. ம. இளங்கோ, அவர்கள்

அமைப்புக்குழு உறுப்பினர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

20, 4வது தெரு விரிவாக்கம், அன்னை தெரேசா நகர்,
மூலக்குளம், புதுச்சேரி – 605 010.
செல்: +91 94431 05825

மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com, வலைப்பூ: www.puduvaibloggers.blogspot.com,

இணையம்: www.pudhuvaitamilbloggers.org

………….

அண்மைக்காலமாக இணையம், கணினி ஆகியவற்றின் பயன்பாட்டின் காரணமாக தமிழ் மொழியும் வளர்ந்துள்ளது என்று கருதலாம். இன்று உலகம் முழுதும் எளிமையாக தமிழில் தகவல் தொடர்புகள் செய்ய முடிகிறது. இந்த வளர்ச்சிக்கு ஒருங்குகுறி நடைமுறைக்கு வந்ததே காரணமாகும்.

ஒருங்குகுறி (Unicode) என்றால் என்ன?

ஒருங்குகுறி என்பது வரியுருக்களையும் எண்முறை உபகரணங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக் கப்பட்ட ஒரு குறிமுறை நியமம்.கணிப்பொறியில் ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளைத் தவிர பிற மொழி எழுத்துக்களை எழுதுவதிலும் படிப்பதிலும் சிக்கல் நிறைந்து இருந்தது. எனவே, உலகில் உள்ள எல்லா மக்களும் கணினியில் எளிதில் பயன்படுத்த, உலகின் எல்லா எழுத்துமுறை களையும் உள்ளடக்கி ஒரு எழுத்துத் தரப்பாடு உருவாக்கப் பட்டது. அதற்குப் பெயர் தான் ஒருங்குறி எழுத்து முறையாகும்.

கணினி, அலைபேசி, கணினி இயங்குதளம் ஆகிய வற்றில் தமிழைப் பயன்படுத்த இந்த முறை மிகவும் அவசியம். இந்த முறையில் தமிழ் எழுத்துக்கள் கையாளப்படுவதால், தமிழ் மொழி கணினியில் தங்கு தடையின்றி செயல்பட முடியும். ஒருங்குகுறியில் தமிழ் கையாளப்படுவதால் இணையதளங்கள் தனியே எழுத்துருக் களை வைத்திருக்கத் தேவையில்லை.

முன்பெல்லாம் ஒவ்வொரு மென்பொருள் நிறுவனமும் புதுப்புது எழுத்துருக்களை உருவாக்கிச் சந்தையில் விற்பனைக்குத் தந்தன. ஒரு நிறுவன எழுத்தை நாம் படிக்க வேண்டும் என்றால் நம் கணினியிலும் அந்த எழுத்துரு இருக்க வேண்டும். அப்போதுதான் பிறர் அனுப்பும் கடிதங்களை, கோப்புகளைப் படிக்க முடியும், நாம் இன்று தமிழ் ஒருங்குகுறி எழுத்துருவைப் பயன்படுத்தி உலகின் எந்த மொழியினர் பயன்படுத்தும் கணினிக்கும் தமிழில் மடல்கள், கோப்புகளை அனுப்பினாலும் சிக்கலின்றி அனைவரும் படிக்க முடியும்.

கிரந்தம் என்பது என்ன?

கிரந்தம் ஒரு எழுத்து முறை, மொழியன்று. மொழியும் எழுத்துமுறையும் வேறுவேறானவை. தமிழர் உருவாக்கிய இக் கிரந்த எழுத்துக்கள் சங்கதமொழி எழுதவும், சமற்கிருதமொழி எழுத்தமைத்துக் கொள்ளவும் பயன்பட்டன. அற்றோடு, இக் கிரந்த எழுத்துக்கள், சமற்கிருதச் சொற்களைத் தமிழில் கலந்து எழுதி மணிப்பவள நடையினால் தமிழுக்குக் கேடு உண்டாக்கவும் காரணமாகின.

ஒருங்குகுறி சேர்த்தியம்

ஒருங்குகுறி சேர்த்தியம் என்பது உலகளவில் ஒருங்குகுறிகளை கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பு எல்லா மொழிகளுக்கும் தகுந்த இடம் ஒதுக்கி அவற்றை பராமரித்து வருகிறது. இந்த அட்டவணையில் கூட்டல், கழித்தல், மாற்றம் வேண்டுமாயின் இந்த அமைப்பிடம் தான் முறையிட வேண்டும். இந்தியா இந்தக் குழுமத்தில் ஓட்டுரிமை பெற்ற உறுப்பினராக உள்ளது. முன்பு தமிழக அரசும் உறுப்பினராக இருந்தது. இப்போது புதுப்பிக்காமல் விட்டு விட்டது.

ஒருங்குகுறியில் தமிழ்:

ஒருங்குகுறி சேர்த்தியம் ஒவ்வொரு மொழிக்குரிய எழுத்துகளுக்குத் தக்க இடங்களை ஒதுக்கி வைத்துள்ளது. தமிழ்மொழிக்கு 128 இடங்களை ஒருங்குகுறி சேர்த்தியம் அமைப்பு வழங்கியுள்ளது. சீன மொழிக்கு 5000க்கும் மேற்பட்ட இடங்களை ஒதுக்கியுள்ளது. தமிழின் 247 எழுத்துக்களையும் நாம் இந்த 128 இல் உள்ள 72 இடங்களிலேயே செயற்படுத்தி விட்டோம். தமிழ் எழுத்துக் களும், தமிழ் எண்கள், ஆண்டு, மாதம் சார்ந்த தமிழ்க் குறியீடுகளும், வழக்கில் உள்ள கிரந்த எழுத்துக்களும் (ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ) இந்த 72 இல் இடம்பெற்றுள்ளன. தமிழுக்குரிய மற்ற 56 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

‘‘தமிழ் நீட்சி’’ முன்மொழிவு

காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த திரு. இரமண சர்மா என்பவர் இவ்வேளையில் ஒரு பரிந்தரை செய்துள்ளார். நிரப்பப்படாமல் உள்ள தமிழுக்குரிய 56 காலியிடங்களில் கிரந்த எழுத்துக்கள் 26ஐச் சேர்க்கும் முயற்சியே அப்பரிந்துரை. இதில் அவர் வடமொழி, செளராட்டிரம் போன்ற மொழிகளைத் தமிழ் எழுத்துக்களில் எழுத தேவநாகரி, தெலுங்கு முதலான மொழிகளைப் போலவே க1, க2 ,க3, க4 என வல்லின எழுத்துக்களின் எழுத்த ‡ மூச்சு வேறுபாடுகளைக் குறிக்கவும், ‘‘வடமொழி உயிரொலிகளுக்கும் என்று மொத்தம் 26 புதிய கிரந்த எழுத்துக்களை நுழைக்க வேண்டும் என்று கூறுகிறார். தமிழ் அட்டவணை யில் தமிழுக்குரிய 56 நிரப்பப்படாத இடங்கள் என்பது நமது வருங்கார பயன்பாட்டிற்கேயயாழிய வேற்று மொழியின்/எழுத்தின் ஆக்கிரமிப்புக்கு அல்ல.

கிரந்தத்தைத் தமிழில் கலந்தால் ஏற்படும் விளைவுகள்

பழைய மணிப்பிரவாள நடைக்கு வித்திடலாம். தெலுங்கு, மலையாளம் போன்ற புது மொழிகளுக்கு வித்திடலாம்.

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீ இ

எழுத்தொடு புணர்ந்து சொல்லாகும்மே

தொல்காப்பியர் வடவெழுத்துக்களை நீக்கி தமிழை எழுதிடச் சொல்லும் போது , நாம் தெரிந்தே வேற்று எழுத்துக் களை நம் மொழியில் கலக்க அனுமதிப்பது தற்கொலைக்கு நிகரானது.

நாக.கணேசனின் பரிந்தரை

இரமண சர்மாவின் பரிந்துரைக்கு மாற்றாக முன்மொழியப்பட்டிருக்கிறது. என்னவென்றால் கிரந்த எழுத்துக்களுக்கு தனி அட்டவணைஅமைத்து, அதில் தமிழுக்கே உரிய சிறப்பு ஒலிகளை தரும் எழுத்துக்களை

(எ, ஒ, ழ, ற, ன, ஆகிய ஐந்தையும்) அதில் சேர்ப்பது.

மேலோட்டமாக பார்த்தால், தமிழ் எழுத்துக்களை தமிழ் மொழியைத் தாண்டி எடுத்துச் செல்லும் நாக. கணேசனின் முன்மொழிவு நன்மை பயப்பது போல் தோன்றும். அவர் எழுதுகிறார்.

‘‘இந்த ஐந்து எழுத்துக்களையும் சேர்ப்பதால், வருங்காலங்களில் தமிழர்கள் கிரந்தம் கலந்தே தமிழை எழுதுவார்கள் என்றும், மின்னஞ்சல்கள், இணையதளங் கள், வலைபூக்கள் ஆகியன கிரந்தம் கலந்தே எழுதப்படும் என்றும், இந்த ஐந்து எழுத்துக்களை சேர்க்காவிடில் தமிழ் மொழியை கிரந்தத்தைக் கொண்டு எழுத இயலாது’’ என்றும் கூறுவதை உணர முடிகிறது.

சுவாமிநாத தேசிகர் போன்றோர் தமிழ் மொழிக்கு ஐந்து எழுத்துக்கள் ( எ,ஒ,ழ,ற,ன) மட்டுமே உண்டு என்று பழித்தவர்கள், இன்று அந்த ஐந்து எழுத்தையும் கொண்டு கிரந்த அட்டவணையில் சேர்த்தால் வருங்காலச் சமூகம் தமிழ் மொழியை எழுத்தில்லா மொழி எனப் பழிக்கவும் கூடும். நமது கோரிக்கை, தமிழோடு கிரந்தத்தையும் கலக்க வேண்டாம், கிரந்தத்தோடு தமிழையும் கலக்க வேண்டாம்.

சிறீ இரமண சர்மாவின் முன்மொழிவு தற் போதைக்கு நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. இருப்பினும் நாம் தொடர்ந்து அதனைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நாக. கணேசனின் முன்மொழிவினால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி ஆராய தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.

தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்தாலும், பிற மொழிகளின் எழுத்துக்கள் தமிழில் கலந்தாலும், பிறமொழி ஒலி தமிழில் கலந்தாலும், தமிழின் தனித் தன்மை கெடும். அவ்வாறு கெடாமல் செவ்வியல் மொழியான தமிழைப் பாதுகாப்பது தமிழர்களின் கடமையாகும்.

கைப்பேசியில் மின்னூல்

கிரந்த திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் கைப்பேசியில் மென்னூல்கள் வெளியிடப்பட உள்ளது. தற்போது திருக்குறள், பாரதியார் பாடல்கள், பாவேந்தர் பாரதிதாசனின் பாண்டியன் பரிசி ஆகியவை வெளியிடப்பட உள்ளன. அவை வெளியிடப்பட்டவுடன் www.pyw3.com என்ற தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருட்களை புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைப்புக்குழு உறுப்பினரும், திரட்டி வலைப்பதிவு திரட்டியின் நிர்வாகியுமான ஏ.வெங்கடேசு இவற்றை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள :agevenkat@gmail.com

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் எழுத்து மாற்றம்

மாலை மலர் செய்தித்தாளில் தமிழ் எழுத்துக்களை மீண்டும் மாற்றம் செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக 7 சனவரி 2010 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதோடு கோவை உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுப் – பொருண்மை களில் எழுத்து மாற்றம் தொடர்பான கலந்துரையரங்கமும் இருந்தது. (பார்க்க படம்-1) இதில் ஏழாவது கலந்துரையாக எழுத்துச் சீர்திருத்தம் இருந்தது.
இந்த கலந்துரையரங்கத்தில் தமிழ் எழுத்துக்களை சீர்திருத்துவது என்ற பெயரில் கட்டுரைகள் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மலேசியா, சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில்  நடைபெற்ற நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ் எழுத்துக்களை மாற்றுவது என்ற முடிவை மாற்றிக் கொண்டதாகவே தெரிகிறது. இதையொட்டி செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான திரு.இராசேந்திரன் கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துக்கள் மாற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் செம்மொழி மாநாட்டில் வீரமணி  எழுத்துமாற்றம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்திப் பேசினார். தமிழ் புத்தாண்டு மாற்றப்பட்ட போது  எதிர்ப்புகள் இருந்தது. அது பின்னர் ஆதரவாக மாறிப்போனது. அதேபோல எழுத்து மாற்றம் செய்யப்பட்டால் கொஞ்சம் எதிர்ப்பு இருக்கும் பின்னர் அடங்கிப் போகும். என தெரிவித்திருந்தார். அடுத்து முதல்வர் கருணாநிதியின் உரையின் முடிவில் கணினி உள்ளிட்ட பிரச்சனைகள் கணக்கில் எடுத்துக் கொண்டு  இறுதி நாளில் ஒரு பட்ஜெட் உரைபோல படிப்பேன் என்று கூறியது. தமிழ் எழுத்து மாற்றமும் உள்ளடக்கம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. அதோடு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மொழியியல் தலைப்பில் எழுத்து சீர்திருத்தம் தலைப்பிலான கட்டுரைகள் வாசிக்கப்பட்டது.
அந்த கட்டுரையை வாசித்த நாக.இளங்கோவன், இலக்குவனார். திருவள்ளுவன், பேராசிரியர் செல்வக்குமார், மணியம் ஆகியோர் எழுத்து மாற்றம் செய்தால் தமிழ் சீர்கேடடையும் என்ற கருத்தை முன்வைத்தனர். ஐந்து பேரில் மற்றுமொருவர் வீரமாமுனிவர் எழுத்துமாற்றம் ஏதும் செய்யவில்லை. ஏ, ஓ ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டது வீரமாமுனிவர் காலத்துக்கு முந்தையது என கட்டுரை வாசித்தார்.

பொதுவாக ஆய்வரங்கங்களில் ஆட்கள் குறைவாக இருந்த நிலையில் எழுத்து மாற்றம் தொடர்பான  அரங்கம் நிறைந்து வழிந்தது. பலர் இடம் இல்லாமல் திருப்பிச் சென்றனர். அதே நேரத்தில் அந்த அமர்வு முடியும் வரை அரங்கம் விருவிருப்பாகவே இருந்தது.

தமிழறிஞர் நாக. இளங்கோவனுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்தது என நடுவர் அறிவித்து முடித்துவிடும் படி தலைவர் கூறிய போது அரங்கத்தில் இருந்தவர்கள், தலைவரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது எங்கள் உயிராதார பிரச்சனை, எனவே அவரை பேசவிடுங்கள் என்று தெரிவித்த போது அரங்கம் விருவிருப்படைந்தது. பார்வையாளர்களின் கோரிக்கையின் அடைப்படையிலும், எதிர்ப்பின் அடிப்படையிலும் தலைவர் வேறு வழியில்லாமல் கால நீட்டிப்பு அளித்தார். மேலும் நேரமாவதால் தலைவர் மீண்டும் எச்சரித்தார். பேராசிரியர் செல்வக்குமார் அடுத்து கட்டுரை வாசிக்க இருந்ததால் தனது நேரத்தை விட்டுகொடுத்து நாக. இளங்கோவனை வாசிக்கும் படி சொன்னார். இருப்பினும் அவரால் குறித்த நேரத்தில் கட்டுரையை முடிக்க இயலவில்லை.

அடுத்து பேசிய பேராசிரியர் செல்வக்குமார் நாக. இளங்கோவனின் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒன்று தான் என்று தன் பேச்சைத் தொடர்ந்தவர் தாம் என்ன சொல்லவருகிறார் எனபதை பதிவு செய்து எழுத்து மாற்றம் தமிழுக்கு கேடானது என வலுவான ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.

முன்னதாக மணியம் அவர்கள் வேறு அமர்வுக்கு தலைமை வகித்தமையால் வர இயலாமல் போனதால் அவரது அனுமதியுடன் அவரது நண்பர் எழுத்து மாற்றம் தேவையற்றது என்ற கருத்தை எடுத்துரைத்தார்.

27-06-2010 அன்று பேராசிரியர் பெஞ்சமின்.லெ.பொ எழுத்துச் சீர்திருத்தமா? தமிழுக்கது பொருத்தமா? என கேள்வி எழுப்பிய பேராசிரியர் எழுத்து மாற்றம் தேவையில்லை என்பதையே வலியுறுத்தினார்.

எழுத்து மாற்றம் செய்யாத அரசு எப்போதும் செய்யப் போவதில்லை என உறுதிப்படுத்த வேண்டும் என்பதே தமிழறிஞர்களின் இப்போதைய கோரிக்கையாகும்.

தமிழை சீர்குலைக்கிறதா தமிழக அரசு? – தமிழக அரசியல் இதழில் கட்டுரை!

தமிழை சீர்குலைக்கிறதா தமிழக அரசு?
எழுத்து சீர்திருத்த பின்னணியில் சீறும் அறிஞர்கள்

தமிழ் மொழியை வளப்படுத்தும் வகையில் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்கள் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட தனிக்குழு, 72 எழுத்துக்களில் மாற்றம் செய்யலாம் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது” -தமிழக அரசின் இந்த அறிவிப்பு தமிழ் ஆர்வலர்களையும், கணினி வல்லுநர்களையும் கொதிப்படைய வைத்துள்ளது.
நடக்க இருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் விழாக் குழு துணைத் தலைவருமான வா.செ.குழந்தைசாமி தலைமையில் ரகசியமாக நடந்துவருவதாக தமிழுணர்வாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

இந்நிலையில்தான், இந்தத் தமிழ் எழுத்து வடிவச் சீர்திருத்தத்தை எதிர்த்து புதுவையில் ‘புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்’ என்ற அமைப்பு, தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாட்டை நடத்தியிருக்கிறது.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இரா.சுகுமாறனை சந்தித்து பேசினோம்.

“தமிழ் எழுத்தை மாற்றும் முயற்சியில் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி தி.மு.க. அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறார். அவர் எழுதியுள்ள கட்டுரையின்படி உயிர்மெய் எழுத்துக்களில் இகர, ஈகார, உகர, ஊகார வரிசைகளில் மாற்றுக் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கிறார். இதன்படி எழுத்து மாற்றம் செய்தால் தமிழ் மொழி அறிவியல் மொழியாகவும் கணினியில் எளிதில் பயன்படக் கூடிய மொழியாகவும் வளர்ச்சி பெறும் என கருத்தை முன் வைக்கிறார். ஆனால் 72 எழுத்துக்களின் மாற்றம் தமிழில் 59 சதவிகிதம் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கணக்கிட்டு கூறியுள்ளனர். இது தமிழ் மொழியையே மாற்றி விடும். இதனால் தமிழில் ஏற்கனவே உள்ள பல்லாயிரக்கணக்கான அரிய நூல்களும் இணையத்தில் உள்ள பல்துறை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்கங்களில் உள்ள செய்திகளும் பயனற்றுப் போகும். தமிழ் அறிந்தவர்கள் மறுபடியும் இந்த புதிய தமிழை படித்தாக வேண்டும். குறைந்த கல்வி அறிவு பெற்றவர்கள் முற்றிலும் கல்லாதவர்களாக மாற நேரிடும். அதனால்தான் இந்த மாற்றத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம்” என்றார் ஆவேசமாக.

இதுகுறித்து மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலாளரும், உத்தமம் அமைப்பின் பொதுக்குழு உறுப்பினருமான கோ.சுகுமாறனை சந்தித்து பேசினோம்.

“உலக அளவில் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த எழுத்து மாற்றம் தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும். தமிழ்நாட்டுத் தமிழர்களை உலகத் தமிழர்களிடத்திலிருந்து தனிமைப்படுத்தும். இதனால் தமிழ் மொழியின் வளர்ச்சியோடு, தமிழர்களின் நிலையும் பின்னுக்குத் தள்ளப்படும். எழுத்து மாற்றம் வற்புறுத்துவோர் கூறும் காரணங்கள் எதுவும் ஏற்கும்படியாக இல்லை. எழுத்து மாற்றத்தால் கணிணிப் பொறியியல் உழைப்பு குறையும். குறைவாக செயல்பட முடியும் எனக் கூறப்படும் கருத்தை கணினி வல்லுநர்கள் சான்றுகளுடன் மறுத்துள்ளனர்.

எழுத்து மாற்றம் செய்ய வேண்டுமானால் பல்துறை சார்ந்த அறிஞர்கள் கொண்ட குழு அமைத்து மிக நுணுக்கமாக ஆராய்ந்து படிப்படியாக மக்கள் ஏற்கும்படி செய்ய வேண்டும். அதை விடுத்து அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததைப் போல் தமிழ் எழுத்து மாற்றம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் சீனாவில் கூட, அனைத்து அமைப்பினரையும் ஒன்று சேர்த்து குழு அமைத்து பொதுவாக எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தி அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தனர். அப்படித்தான் இந்த அரசும் செய்ய வேண்டும்” என்றார்.

இந்த மாநாடு குறித்து, ‘தமிழ் வரி வடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா?’ என்ற நூலின் ஆசிரியரும் மூத்த தமிழ் அறிஞருமான திருச்சி இளங்குமரனாரிடம் பேசினோம்.

“இந்திய மொழிகளில் மிகக் குறைந்த எழுத்துக் கொண்ட மொழி தமிழ்தான். அதில் ஏன் மாற்றம் கொண்டுவர வேண்டும்? தந்தை பெரியார் 11 எழுத்துக்களை மட்டும் மாற்றம் செய்தார். அதனால் எவ்வித இடையூறும் இல்லை. இதற்காக பெரியார் மிகப் பெரிய தண்டனை அனுபவித்தார். தமிழக அரசு அவரது புத்தகங்களை நூலகங்களில் வாங்க மறுத்தது. பின்பு எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் அந்த எழுத்துக்கள் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தது. தமிழ்மொழி அழகிய நோக்கிலும் தத்துவ நோக்கிலும் மிகச் சிறப்பாக அமையப் பெற்றது.

பள்ளிக்கூடத்தில், நீதிமன்றத்தில், ஆட்சி ஆணை மொழியாக, கோவில் மற்றும் இசை மேடைகளில் தமிழ் இருக்க வேண்டும். இதைத்தான் 69-ல், ‘எல்லா நிலைகளிலும் தமிழ்’ என்று அண்ணா சொன்னார். ஆனால் அவரை முன் மாதிரியாக கொண்டு ஆட்சி செய்யும் கலைஞர் 35 ஆண்டுகள் ஆகியும் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாதுகாக்கப்பட்ட ஒரு மொழியை 30 நாட்களில் தொலைக்கப் பார்க்கிறார் கலைஞர். இந்த சீர்திருத்தத்தின் மூலமாக மெல்லத் தமிழ் இனி சாகும். தமிழ் முற்றிலுமாக குழி தோண்டி புதைக்கப்படும்” என்றார் வேதனையோடு.

இதுகுறித்து அமெரிக்கத் தமிழ் சங்க அமைப்பாளரும், உலகத் தமிழ் அமைப்புகளின் பொதுச் செயலாளரும், வட அமெரிக்காவில் தமிழ் மேல்நிலைப்பள்ளி நடத்தி வருபவருமான சொர்ணம் சங்கரபாண்டியிடம் பேசினோம்.

“தமிழ் எழுத்துக்கள் சிரமமாக இருக்கிறது என்று அறிவியல் பூர்வமாக தமிழக அரசு நிரூபிக்கவில்லை. கற்பனையாகவே முடிவெடுக்கப்பட்டு தமிழ் எழுத்து வடிவத்தை எளிமைப்படுத்துகிறோம் என முடிவெடுத்துள்ளது. இது நம் வீட்டுக்கு நாமே தீ வைப்பதற்குச் சமம். தமிழர்களை திருமணம் செய்துகொண்ட வேற்று மொழியினர் கூட தமிழ் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அவர்கள் கூட தமிழ் எழுத சிரமம் என்று கூறியதில்லை. ஜப்பான், சீன மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உள்ளன. இவற்றை எழுதும்போது அவர்களுக்கு சிக்கல் வந்ததில்லை. இணைய தளத்தில் கூட தங்குதடையின்றி புழங்குகின்றனர். எழுத்துமாற்றம் என்பது தமிழ் வழி கற்கும் அப்பாவி மாணவர்களை பாதிக்கும். எனவே இதனை அனுமதிக்கக் கூடாது” என்றார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் விழாக்குழு துணைத் தலைவரும், எழுத்துச் சீரமைப்பின் முக்கிய பங்கு வகிப்பவருமான வா.செ.குழந்தைசாமியிடம் இந்த எதிர்ப்புகள் பற்றியெல்லாம் பேசினோம்.

“இது பெரியார் முன் வைத்த எழுத்து சீரமைப்புக்கு அடுத்த கட்டம். தமிழ் மொழி கற்பது நேரம் அதிகமாக செலவிடப்படுவதாக அறியப்பட்டு அதை எளிமைப்படுத்தவே இந்த எழுத்து சீரமைப்பு. மேலும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் அடுத்த தலைமுறைக்கு இனிமையாகவும், எளிமையாகவும் நேரத்தை சேமிக்கும் வகையிலும் எழுத்து மாற்றம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள 247 தமிழ் எழுத்துக்களுக்கு நாம் 107 குறியீடுகளை கற்கிறோம். இப்போது உள்ள சீர்திருத்தத்தின் படி 39 குறியீடுகள் கற்றாலே போதும். எனவே இந்த எழுத்து சீர்திருத்தம் அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

ஏற்கனவே தற்கால சந்ததியினருக்கு தமிழ் தகறாராக இருக்கும் நிலையில், இந்த எழுத்து சீர்திருத்தம் தேவையா என்பதை அரசு ஆயிரம் முறை சிந்திக்க வேண்டும்.

மு.குகன்

தமிழ் எழுத்து வடிவமாற்றம்! உலகத் தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி – தமிழிஷ் 24 செய்தி

தமிழ் எழுத்து வடிவமாற்றம்! உலகத் தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி

தமிழக அரசு சார்பில் வரும் சூன் மாதம் கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்து மாற்றம் குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும் என செய்தி வெளியாகியுள்ளது.

இந்த எழுத்து மாற்ற அறிவிப்பு உலகம் முழுவதுமுள்ள தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தமிழக அரசு தன்னிச்சையாகவும், தமிழ் மொழியை சிதைக்கும் வகையிலும் தமிழ் எழுத்து மாற்றம் கொண்டு வருவதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இந்த சர்ச்சைக்குறிய பிரச்சனை ஊடகங்களில் வெளியானது, இது தொடர்பாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும்,​​ தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான ம.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அளிக்கப்படவுள்ளன.​ இம்மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் தெரிவிக்கவில்லை.​ அறிஞர்கள் கூடி ஆய்வின் பொருள் பற்றி விவாதிக்கும் அரங்காகத் தான் செம்மொழி மாநாடு அமையும் என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சைக்கு இதுவரை தமிழ முதல்வர்  எந்த வித விளக்கமும் அளிக்காதது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பாக உள்ளது.

எழுத்துச் சீர்திருத்தம் செய்யக்கூடாது : வலைப்பதிவர் சிறகம் வலியுறுத்தல் – தினமலர்

தினமலர் முதல் பக்கம் » புதுச்சேரி செய்திகள்

எழுத்துச் சீர்திருத்தம் செய்யக்கூடாது : வலைப்பதிவர் சிறகம் வலியுறுத்தல்

மே 21,2010,00:00 IST

புதுச்சேரி: தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்யப் போவதில்லை என தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று வலைப்பதிவர் சிறகம் கோரிக்கை விடுத் துள்ளது. புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன் கூறியதாவது: கோவையில் நடக்க உள்ள உலக செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப் போவதில்லை என மாநாட்டின் ஒருங்கிணைப் பாளர் ராஜேந்திரன் கூறியுள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது கொண்டு வரப்படும் எழுத்து மாற்றம் முன் னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமியால் முன்மொழியப்பட்டது. இதன்படி மாற் றம் செய்தால் தமிழில் 80 விழுக்காடு சொற்களும் 59 விழுக்காடு எழுத்துக்களும் மாறும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தமிழில் எழுத்து மாற்றம் கொண்டு வந்தால் பல்லாயிரக்கணக்கான அரிய தமிழ் நூல்கள், இணையத்தில் உள்ள அரிய தகவல்கள் பயனற்றுப் போகும் ஆபத்து உள்ளது. தமிழக அரசின் இந்த எழுத்து மாற்ற அறிவிப்புக்கு உலகத் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எழுத்து மாற்றம் செய்யப் போவதில்லை என தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து, அதனை முதல்வரோ அல்லது தொடர்புடைய அமைச்சரோ அறிவிப்பு செய்து சர்ச்சைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். அமைப்புக் குழு உறுப்பினர்கள் சுகுமாரன், பேராசிரியர் இளங்கோ உடனிருந்தனர்.

தமிழ் எழுத்து சீர்திருத்தமில்லை தஞ்சை பல்கலை துணைவேந்தருக்கு புதுவை வலைப்பதிவர் சிறகம் நன்றி – தினகரன் நாளிதழ்

புதுச்சேரி, மே 20: புதுவை வலைப்பதிவர் சிறக ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு எழுத்து சீர்திருத்தம் செய்யப்போவதாக வும், அதற்கென தனிக்குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் செய்தி வெளியானது. தமிழில் 18ம் நூற்றாண்டில் தான் முதல்முதலில் வீரமாமுனிவர் எழுத்து சீர்திருத்தம் செய்தார். அதன்பின் 1935ல் தந்தை பெரியார் தமிழில் உள்ள 11 எழுத்துக்களை மாற்றியமைத்தார். அவர் புதியதாக எழுத் துகளை உருவாக்காமல் ஏற்கனவே இருந்த தமிழ் எழுத்துக்களை வைத்து சில மாற்றங்களை செய்தார்.

தற்போது கொண்டு வரப்படும் எழுத்து மாற்றம் முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமியால் முன்மொழியப்பட்டது. அதாவது உயிர்மெய் இகர, ஈகார, உகர, ஊகார எழுத்துகள் 72க்கும் மாற்றாக புதிய குறியீடுகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். இதன்படி மாற்றம் செய்தால் அது தமிழில் 80 சதவீதம் சொற்களும், 59 சதவீத எழுத்துகளும் மாறும் என ஆய்வாளர்கள் கணக்கிட்டு கூறியுள்ளனர். இது ஓட்டுமொத்த தமிழ் மொழியை மாற்றுவதாகும். இவ்வாறு எழுத்து மாற்றம் கொண்டு வந்தால் ஆயிரக்கணக்கான அரிய தமிழ் நூல்கள், இணையதளத்தில் உள்ள அரிய தகவல்கள் பயனற்று போகும் ஆபத்துள்ளது.
புதுவையில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு கடந்த 16ம் தேதி நடந்தது. இம்மாநாட்டில் தமிழ் எழுத்து மாற்ற முயற்சியை கைவிட வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் உலக செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்து சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிட போவதில்லை என்று மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தருமான ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தமிழக அரசு எழுத்து மாற்றம் செய்யப் போவதில்லை என கொள்கை முடிவெடுத்து அதனை முதல்வரோ அல்லது துறை அமைச்சரோ அறிவிப்பு செய்து இந்த சர்ச்சைக்கு முடிவு கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அமைப்பு குழு உறுப்பினர் கோ.சுகுமாரன், பேராசிரியர் இளங்கோ, ஒருங்கிணைப்பாளர் தமிழநம்பி ஆகியோர் உடனிருந்தனர்.

புதுச்சேரி வலைப்பதிவர் UNI – நெட் இந்தியா செய்தி

நெட் இந்தியா தனது தளத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது அதற்காக நன்றி

Puduvaibloggers urge TN CM not to reform Tamil letters

Puducherry | Wednesday, May 19 2010 IST

நெட் இந்தியா செய்தி இணைப்பு

Thanking convenor of the Tamil Classical Language Conference and Vice-Chancellor of the Tamil University M Rajendran for his statement that no statement on the reforms on Tamil letters will be there in the conference, the Puduvaibloggers today urged the Tamil Nadu Chief Minister M Karunanidhi to take such a decision. In a statement here today, Mr R Sugumaran, convenor of the bloggers, said they were shocked to see a news item in an eveninger that Tamil Nadu Governemnt was to bring in certain reforms on Tamil letters.

Veeramamunivar had initiated the Tamil letter reforms in the 18th centuery followed by Thanthai Periyar in 1935.

Any further changes in the Tamil letters would make several informations in Tamil in web sites and several books useless.

It would also make partially literate as illiterate, he added.

புதுச்சேரி வலைப்பதிவர் தமிழக முதவரிடம் கோரிக்கை நியூ கேரளா. காம் தளத்தில் செய்தி

நியூ கேரளா.காம் தளத்தில் செய்தி

Puduvaibloggers urge Tamil Nadu CM not to reform Tamil letters

Puducherry, May 19 : Thanking convenor of the Tamil Classical Language Conference and Vice-Chancellor of the Tamil University M Rajendran for his statement that no statement on the reforms on Tamil letters will be there in the conference, the Puduvai bloggers today urged the Tamil Nadu Chief Minister M Karunanidhi to take a similar decision.

In a statement here today, Mr R Sugumaran, convenor of the bloggers, said they were shocked to see a news item in an eveninger that Tamil Nadu Governemnt was to bring in certain reforms on Tamil letters.

Veeramamunivar had initiated the Tamil letter reforms in the 18th century followed by Thanthai Periyar in 1935.

Any further changes in the Tamil letters would make several information in Tamil on websites and in several books useless.

It would also make partially literate as illiterate, he added.

–UNI

எழுத்துச் சீர்திருத்தம் இல்லை: புதுச்சேரி மாநாட்டுக்கு வெற்றி – தினமணி 20-05-2010

சென்னை

எழுத்துச் சீர்திருத்தம் இல்லை: புதுச்சேரி மாநாட்டுக்கு வெற்றி

First Published : 20 May 2010 09:20:56 AM IST Last Updated :

புதுச்சேரி, மே 19: தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் இப்போது இல்லை என்ற அறிவிப்பு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று இதன் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இச் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் ரா. சுகுமாரன், அமைப்புக்குழு உறுப்பினர்கள் கோ.சுகுமாரன், பேராசிரியர் நா. இளங்கோ,ம. இளங்கோ, விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழநம்பி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி வெளியான செய்தி ஒன்றில் தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தம் செய்யப் போவதாகவும், அதற்காக ஒரு தனிக்குழு அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழில் எழுத்து மாற்றம் கொண்டு வந்தால் பல்லாயிரக்கணக்கான அரிய தமிழ் நூல்கள், இணையத்தில் உள்ள அரிய தகவல்கள் பயனற்றுப் போகும் ஆபத்துள்ளது. இதற்கு உலகத் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

இதன் ஓர் அங்கமாகவே புதுச்சேரியில் 16-ம் தேதி தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு நடத்தினோம். இதில் தமிழ் எழுத்து மாற்ற முயற்சியைக் கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப் போவதில்லை என்று மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருமான ம. ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் மற்றும் உலக அளவில் தமிழ் ஆர்வலர்கள் மேற்கொண்ட முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும். மேலும் எழுத்து மாற்றம் செய்யப் போவதில்லை என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அதை முதல்வரோ அல்லது தொடர்புடைய துறை அமைச்சரோ அறிவிப்பு செய்து இந்தச் சர்ச்சைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.